காற்றுமாசாக்கத்தினை எதிர்கொள்வோம்!

யாழ்ப்பாணத்தில் கடந்த சிலநாட்களாக (05-08/DEC/2022) காற்று மாசாக்கத்தின் அளவு சடுதியாக அதிகரித்துக் காணப்படுகின்றது. சிறுதுணிக்கைகளின் (PM 2.5) அளவானது உலக சுகாதார மன்றத்தின் ஏற்றுக்கொள்ளத்தக்க நிலையிலும் 21.8 மடங்காக அதிகரித்துள்ளது. காற்றுமாசாக்கமானது அஸ்துமா போன்ற நோயுடையவர்களை உடனடியாகப் பாதிக்கும். காற்றுமாசாக்கம் அதிகமுள்ள சூழலில் தொடர்ச்சியாக வாழ்பவர்களுக்கு பாரிசவாதம் மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். சிறுவர்களையும் கர்ப்பிணித்தாய்மாரையும் காற்றுமாசாக்கம் வெகுவாகப் பாதிக்கலாம். தேவையின்றி வெளியே நடமாடுவதைத் தவிர்த்தல். வீடுகளின் சன்னல்களைப் பூட்டி வைத்திருத்தல், மாஸ்க் அணிதல் ஆகியவை பாதிப்பினைக் குறைத்துக்கொள்ள உகந்த வழிமுறைகளாகும்.

சிறுவர் ஒன்றுகூடல்

யாழ்ப்பாணம் மாசற்ற மாநகரம் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக சுவடி நிறுவகத்தால் 'சிறுவர் ஒன்றுகூடல்' இம்மாதம் 11.09.2022 சனிக்கிழமை அன்று மாலையில் கோண்டாவிலில் அமைந்துள்ள எழுதிரளில் ஒழுங்குசெய்யப்பட்டது. சுவடி நிறுவகத்தின் இணைநிறுவுனர் மருத்துவர். சிறீபவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் துணை முதல்வர் திரு. ஈசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். நல்லூர் உற்சவகாலத்தினை முன்னிட்டுச் சுவடி நிறுவகத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட சித்திரப் போட்டியிற் பங்கேற்ற சிறுவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசுகளும் விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டன. தொடர்ந்து செம்முகம் ஆற்றுகைக் குழுவின் சிறப்பு நாடக ஆற்றுகையும் இடம்பெற்றது. சுவடி நிறுவகமானது இளையோர், சிறுவர்களிடையே மாசற்ற பொது எதிர்காலம் தொடர்பான கனவினை விதைப்பதற்கு இதுபோன்ற ஒன்றுகூடல்களை யாழ்ப்பாணம் மாசற்ற மாநகரம் செயற்திட்டத்தினூடாகத் தொடர்ந்தும் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டுள்ளது.

செயற்பாட்டாளர் சந்திப்பு

யாழ்ப்பாணம் மாசற்ற மாநகரம் செயற்திட்டத்தில் தன்னார்வலர்களாக இணைந்து பணியாற்றிய இளையோருடனான சந்திப்பு இம்மாதம் 10.09.2022 சனிக்கிழமை அன்று மாலையில் கோண்டாவிலில் அமைந்துள்ள எழுதிரளில் இடம்பெற்றது. சுவடி நிறுவகத்தின் இணைநிறுவுனர் மருத்துவர். சிறீபவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 'மாசற்ற பொது எதிர்காலத்திற்கான உறுதிமொழி' அறிமுகம் செய்யப்பட்டது. கலந்துகொண்ட செயற்பாட்டாளர்கள் அனைவரும் உறுதிமொழியேற்று யாழ்ப்பாணம் மாசற்ற மாநகரம் எண்ணிமக் குழுமத்தில் இணைந்து பணியாற்றத் தம் விருப்பினை வெளிப்படுத்தினர். எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பான விரிவான கலந்துரையாடலைத் தொடர்ந்து கலந்துகொண்ட செயற்பாட்டாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் கொசுவுச் சட்டைகளும் கையளிக்கப்பட்டன.

சிறுவர் சித்திரக் கண்காட்சி

நல்லைக் கந்தன் திருவிழாக்காலத்தினை முன்னிட்டுச் சுவடி நிறுவகத்தினால் நடாத்தப்பட்ட சிந்திரப் போட்டியில் பங்கேற்ற சிறுவர்களின் ஆக்கங்களை உள்ளடக்கிய சித்திரக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு 09.09.2022 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை கோண்டாவிலில் அமைந்துள்ள எழுதிரளில் இடம்பெற்றது. சுவடி நிறுவகத்தின் இணை நிறுவுனர் மருத்துவர். க. சிறீபவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் திரு. ஆர். ரி. ஜெயசீலன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். அண்மைக்காலங்களில் யாழ்ப்பாணம் மாநகர சபையினரால் முன்னெடுக்கப்படும் பல்வேறு செயற்திட்டங்கள் காரணமாக மாநகரம் பெரிதும் அழகானதாகவும் சுத்தமானதாகவும் மாறிவருவதை அவதானிக்க முடிவதாக மருத்துவர். க. சிறீபவன் தலைமையுரையில் தெரிவித்தார். தொடர்ந்து கண்காட்சியானது மாநகர ஆணையாளர் அவர்களால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து ஆணையாளர் தனதுரையில் அவர்கள் நெகிழிக் கழிவுகளில் மீள்சுழற்சியில் மாநகரசபையினர் எதிர்நோக்கும் சவால்களை எடுத்துரைத்ததோடு அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளால் கிடைத்த அடைவுகளையும் குறிப்பிட்டார். கலந்துகொண்ட விருந்தினர்களும் ஆர்வலர்களும் கண்காட்சியைப் பார்வையிட்டதோடு ஆரம்ப நிகழ்வு இனிதே நிறைவெய்தியது.

art competition (3) (1).pdf

ஓவியப் போட்டி 2022

ஆரோக்கியமான மாசற்ற சூழல் ஒவ்வொரு தனிமனிதனதும் அடிப்படை உரிமை என ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் நமது மாநகரின் எதிர்காலம் பற்றி தெளிவான தொலைநோக்கு இல்லாமையால் நமது எதிர்காலம் மட்டுமல்ல நம் சிறார்களின் எதிர்காலமும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றது. சிறார்கள் தமது எதிர்காலம் தொடர்பான கற்பனைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்த இவ் ஓவியப் போட்டி நல்லதொரு களமாகும். நல்லைக் கந்தன் உற்சவகாலத்தினை முன்னிட்டுச் சுவடி நிறுவகத்தால் நடாத்தப்படும் ஓவியப் போட்டி 2022 இல் கலந்துகொள்ளுங்கள், பரிசுகளை அள்ளுங்கள்.