ஓவியப் போட்டி 2022

ஆரோக்கியமான மாசற்ற சூழல் ஒவ்வொரு தனிமனிதனதும் அடிப்படை உரிமை என ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் நமது மாநகரின் எதிர்காலம் பற்றித் தெளிவான தொலைநோக்கு இல்லாமையால் நமது எதிர்காலம் மட்டுமல்ல நம் சிறார்களின் எதிர்காலமும் கேள்விக்குள்ளாக்கப் படுகின்றது. சிறார்கள் தமது எதிர்காலம் தொடர்பான கற்பனைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்த இவ் ஓவியப் போட்டி நல்லதொரு களமாகும். நல்லைக் கந்தன் உற்சவ காலத்தினை முன்னிட்டுச் சுவடி நிறுவகத்தால் நடாத்தப்படும் ஓவியப் போட்டி 2022 இல் கலந்துகொள்ளுங்கள், பரிசுகளை அள்ளுங்கள்.


பிரிவுகளும் தலைப்புகளும்

  • ஆரம்பப்பிரிவு (தரம் 03 - 05): நமது வீட்டுச்சூழலை மாசற்றதாக மாற்றுவோம்

  • இடைநிலைப்பிரிவு (தரம் 06 - 08): நாம் காண விரும்பும் மாசற்ற மாநகரம்

  • மேற்பிரிவு (தரம் 09 - 11, A/L): கழிவுகளை மலையாய் உருவாக்கும் பொறிமுறைக்கு முடிவு கட்டுவோம்

பாடசாலையிற் கற்கும் தரத்திற்கேற்பச் சரியான தலைப்பினைத் தெரிவுசெய்வது அவசியமானதாகும். பொருத்தமற்ற பிரிவின் தலைப்பினைத் தெரிவுசெய்து வரைந்திருப்பின் அவ் ஓவியம் போட்டிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது.

போட்டி விதிகள்

பொருத்தமான A4 அளவுள்ள தாளில் விரும்பிய வர்ண ஊடகத்தினைப் பயன்படுத்தி வரையுங்கள். அனுப்புபவரின் பெயர், கைத்தொலைபேசி இலக்கம், முகவரியுடன் கீழ்க்காணும் முகவரிக்கு 05/09/2022 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாகத் தபாலில் அனுப்பி வையுங்கள். தபாலில் அனுப்பும் போது ஓவியங்கள் மடிந்தோ, நனைந்தோ சேதப்படாமல் இருப்பதை உறுதிசெய்யுங்கள். ஓவியங்கள் மோசமாகச் சேதமடைந்திருப்பின் போட்டிக்கோ, கண்காட்சிக்கோ சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதையும் கவனத்திற் கொள்ளுங்கள். மேலதிக விபரங்களை அறிய 077 986 6409 - 077 245 3108 என்ற இலக்கங்களை வட்சப்பில் தொடர்பு கொள்ளலாம்.

பரிசுகளும் பாராட்டும்

ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பான ஐந்து ஓவியங்களிற்குப் பரிசுகளும் பங்குபற்றும் மாணவர்களிற்குச் சான்றிதழ்களும் வழங்கப்படும். தெரிவுசெய்யப்பட்ட தரமான ஓவியங்கள் எம்மால் ஒழுங்கு செய்யப்படவுள்ள ஓவியக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும். குறித்த ஓவியக் கண்காட்சியானது செப்ரம்பர் மாத நடுப்பகுதியில் எழுதிரள், 209, பலாலி வீதி, கோண்டாவில் என்ற முகவரியில் இடம்பெறவுள்ளது. திகதி, நேரம் தொடர்பான விபரங்கள் இவ் இணையத்தளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

யாழ்ப்பாணம் மாசற்ற மாநகரம்

இவ் ஓவியப் போட்டியானது யாழ்ப்பாணம் மாசற்ற மாநகரம் செயற்திட்டத்தின் ஓர் செயற்பாடாகும். இச் செயற்திட்டமானது சுவடி நிறுவகத்தினரால் மேற்கொள்ளப்படும் இச் செயற்திட்டத்திற்கு கொம்டூயிட் கனடா மற்றும் கனேடிய அரசின் உள்ளூர் செயற்பாடுகளுக்கான நிதியம் ஆகியவர்களின் அனுசரணை உண்டு. இச்செயற்திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை என்ற md@suvadi.org மின்னஞ்சலை அணுகுவதன் மூலம் பெறலாம்.