நானூறாண்டில் யாழ்ப்பாணம்: மாசற்ற மாநகரை ஒன்றிணைந்து உருவாக்க உறுதியேற்போம்.

போர்த்துக்கேயர் 1621 ஆம் ஆண்டளவில் தற்போதுள்ள இடத்தில் யாழ்ப்பாண மாநகரத்தினைப் பிரகடனப்படுத்திக் நாற்சதுரக் கோட்டையையும் அமைத்துக்கொண்டு ஆண்டனர். அந்தவகையில் பார்க்கும் போது யாழ்ப்பாண நகரிற்கு தற்போது வயது 400. ஆனால் நல்லூரையும் மேலும் பல இடங்களையும் இடங்களையும் தலைமையிடமாகக் கொண்டுவிளங்கிய யாழ்ப்பாண அரசுக்கு மிகநீண்ட வரலாறு உண்டு. இந்த மாநகரில் வாழ்ந்த மக்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மலேசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களிற்கும் அதற்குப் பின்னராக காலத்திற் குறிப்பாக மேற்குலக நாடுகளிற்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் 'யாழ்ப்பாணம்' என்னும் அடையாளம் அவர்களை ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கின்றமை கண்கூடு. புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமன்றி அவர்களின் அடுத்த அடுத்த தலைமுறையினரும் இவ் அடையாளத்தினைப் பெருமையாகக் கருதுகின்றமையைக் காண்கின்றோம்.


நானூறு வருடங்களாகத் தன்னெழில் குன்றாமல் இயற்கை அழகுகெடாமல் இலங்கும் இந்த மாநகரம் கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு சவால்களை எதிர்நோக்கிவருவதை நாமறிவோம். குறிப்பாகக் கடலுக்குச் சமீபமாகவுள்ள மாநகரம் என்ற அடிப்படையில் காலநிலை மாற்றத்தினால் பேரச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளோம். அடிக்கடி நிலப்பகுதியினுள் புகும் கடல்நீர் காரணமாகக் கடலோரப் பிரதேசங்களில் இருந்து மக்கள் இடம்பெயரவேண்டி இருக்கின்றது. முன்னர் நன்னீராகக் காணப்பட்ட பல கிணறுகள் தற்போது உவர்நீராகிவிட்டன. திடீர் மழைப்பொழிவின் பின்னர் நகரமே வெள்ளத்தில் மூள்குவது வழமையாகிவிட்டது. சிலகாலங்களில் ஏற்படும் தொடர்ச்சியான வறட்சி காரணமாக பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்குகின்றோம்.


இவற்றுக்கும் மேலதிகமாகக் கட்டின்றி அதிகரித்துக் காணப்படும் நெகிழிப் பாவனை, வீதியோரங்களில் மலிந்த குப்பை கூழங்கள், முறையற்ற கழிவுமுகாமைத்துவம் என்பன நகர மக்களின் நாளாந்த வாழ்விற்குச் சவாலாக உருவெடுத்துள்ளன. ஒரு காலத்தின் துவிச்சக்கர வண்டிகளின் நகரமாக அறியப்பட்ட யாழ்ப்பாண மாநகரம் தற்போது மோட்டார் வாகனங்களின் அதிகரிப்பால் வாகன நெருக்கடி மிகுந்ததாக மாறியுள்ளது. அதிகரித்துவரும் தொழில்முயற்சிகளுக்கு ஏற்றவகையில் நிலைபேறான சக்தி வழங்கலோ ஏனைய வளங்களின் பயன்பாடோ திட்டமிடப்படாத நிலையில் மாநகரம் பேரழிவினை எதிர்கொண்டுள்ளது. நானூறு வருட பாரம்பரியம் மிக்க இந்த மாநகருக்கு என ஒரு நிலைபேறான தொலைநோக்கு அவசியம். அந்தத் தொலைநோக்கினை உருவாக்கும் முயற்சியில் இளையோர்கள் பங்களிப்பு மிக அவசியம்.


2019 ஆம் ஆண்டு முதன்முதலாக கிளைமத்தோன் பெருநிகழ்வு இலங்கையில் ஒழுங்குசெய்யப்பட்டது. உலகம் முழுவதும் குறிப்பாக ஒரே காலப்பகுதியில் இளையோரை ஒன்றுதிரட்டி காலநிலை மாற்றத்திற்கெதிரான செயலூக்கத்தினை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வே கிளைமத்தோன் என அழைக்கப்படுகின்றது. டில்மா நிறுவன அனுசரணையுடன் இயற்கைவழி இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பெருநிகழ்வில் இளையோர் அணிதிரண்டு பல்வேறு மாற்று வழிகளை/தீர்வுகளை முன்வைத்தனர். அவ்வாறாகச் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றே 'யாழ்ப்பாணம் மாசற்ற மாநகரம்" திட்டமாகும். தொடர்ந்து சுவடி நிறுவகத்தினர் 2021 ஆம் ஆண்டு கனேடிய அரசு மற்றும் கொம்டூயிட் கனடா நிதி அனுசரணையுடன் யாழ்ப்பாணம் மாசற்ற மாநகரம் செயற்திட்டத்தினை ஆரம்பித்தனர். சிறகுகள் அமையம், இயற்கைவழி இயக்கம், Idea Factory, Safe a life, போகர் வைத்தியசாலை போன்ற பல்வேறு நிறுவனங்கள் தொடர் செயற்பாடுகளை மேற்கொள்ள ஒத்துளைப்பு நல்கினர்.


சென்றாண்டு நடுப்பகுதிமுதல் இன்றுவரையான காலப்பகுதியில் பல்வேறு கலந்துரையாடல்கள், கருத்துப்பகிர்வுகள், களச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பலநூற்றுக்கணக்கான இளையோர் ஒன்றிணைந்து கடற்கரையோரச் சுத்திகரிப்பு, யாழ்ப்பாணக் கோட்டைச் சுற்றுப்புறச் சூழல் சுத்திகரிப்புப் போன்ற பல பணிகளை ஆற்றிவந்துள்ளனர். இச் செயற்பாடுகளில் ஈடுபட்ட அனைவரையும் உள்ளீர்த்து ஓர் எண்ணிமக் குழுமமாகக் கட்டமைத்து எதிர்காலப்பணிகளை முன்கொண்டுசெல்லத் தீர்மானித்துள்ளோம். இதற்கென www.jaffnacleancity.org என்ற இணையத்தளமும் உருவாக்க்கப்பட்டுள்ளது. இக்குழுமத்தின் ஒருபணியாக பாடசாலை மாணவர்களுக்கான ஓவியப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஓவியக் கண்காட்சியும் இடம்பெறவுள்ளது. எண்ணிமக் குழுமத்தின் ஆதரவுடன் மேலும் பல செயற்பாடுகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.


இவ் எண்ணிமக் குழுமத்தில் உங்களையும் ஒருவராக இணைத்துக்கொள்ள இணையத்தளத்திற்குச் சென்று கீழ்க்காணப்படும் மாசற்ற பொது எதிர்காலத்திற்கான உறுதியேற்பினை மேற்கொள்வது அவசியமானதாகும். இவ் உறுதியேற்பினை மேற்கொள்பவர்கள் தம்மாலியன்ற வகையில் தனிப்பட்ட ரீதியில் மாசற்ற பொது எதிர்காலத்தினை உருவாக்க உழைப்பதுடன் ஏனைய செயற்பாட்டாளர்களுடன் கூட்டிணைந்து பணியாற்றுவார்கள் எனவும் எதிர்பார்க்கின்றோம். மேலும் விபரங்களை அறிய md@suvadi.org என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பினை மேற்கொள்ளலாம்.


மாசற்ற பொது எதிர்காலத்திற்கான உறுதியேற்பு


"நமது மாநகரம், சமூகம் மற்றும் இயற்கை என்பன என்றுமில்லாதவாறு தீவிர ஆபத்தைத் தற்போது எதிர்கொண்டுள்ளன. நமது தெரிவுகள் இந்த நிலைமைக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.


மேம்பட்ட சக்தித் தெரிவுகளுடன் கூடியதும் காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கக் கூடியதுமான மாசற்ற வாழ்விடச்சூழல் நமக்கும் நம் எதிர்காலத் தலைமுறைகளுக்கும் அவசியமானது.


அனைவருக்கும் பொதுவானதும் மாசற்றதுமானதுமான எதிர்காலத்திற்காகச் ஒன்றிணைந்து செயற்படவும்; உறுதியாகக் குரல் கொடுக்கவும் நான் உறுதிமொழி ஏற்கின்றேன். "